இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு கட்டில்கள் தட்டுப்பாடு

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் கட்டில்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சை மேற்கொள்ளும் 12 பிரதான வைத்தியசாலைகளில் இன்னும் 253 கட்டில்கள் மாத்திரமே உள்ளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

12 வைத்தியசாலைகளில் 1581 கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 1328 கட்டில்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 12 வைத்தியசாலைகளில் அதிக நோயாளர்கள் கட்டில்கள் கொண்ட வைத்தியசாலை நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையாகும். அதில் 400 கட்டில்கள் கொரோனா நோயாளிகளுக்கான கட்டில்களாகும். 157 கட்டில்களில் நோயாளிகள் இதுவரையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் 120 கட்டில்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதன் எண்ணிக்கை கடந்து 160 கட்டில்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய இன்னமும் 253 கட்டில்கள் மாத்திரமே உள்ளது.

எனினும் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக 3000 கட்டில்கள் வரை அதிகரிக்கும் திறன் சுகாதார பிரிவிடம் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top