இலங்கை செய்திகள்

அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் இலங்கை!

இலங்கை மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவிய நாடுகளுக்கு பிரதி உபகாரமாக இன்று தனது சர்வதேச நிலைப்பாடுகளை எவ்வாறு, எத்தகைய போக்கில் கொண்டு செல்வது என்று குழம்பியுள்ள நிலையில் இருப்பதையே காணமுடிகிறது.

இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் வடக்கு-கிழக்கில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் இலங்கைக்கு இராணுவ ரீதியாகப் பெரிதும் உதவிகளைப் புரிந்திருந்தன.

ஆயுத தளபாடங்கள் உட்பட, படையினருக்கான பயிற்சிகள் மற்றும் நிதியுதவிகள் என்ற வகையில் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் பங்களிப்பு மிகக் கணிசமானதாகவே காணப்பட்டது.

இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தம் நீடித்திருந்த காலத்திலேயே இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் உருவான அமெரிக்கா மற்றும் அன்றைய சோவியத் யூனியனுடனான பனிப்போர் எண்பதுகளின் இறுதியில் முடிவுக்கு வந்து, ஐரோப்பாவில் புதிய பூகோள அரசியல் தோற்றம் பெற்றிருந்தது.

இந்நிலையில் அமெரிக்கா ‘பூகோள காவல்காரன்’ என்ற தனது ஆளுமையை நிலைநாட்ட மத்திய கிழக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் காலூன்றியதோடு லிபியத் தலைவர் கேணல் கடாபி, ஈராக் அதிபர் சதாம் ஹ_சைன் போன்றவர்களின் மரணங்களையும் உறுதிசெய்திருந்தது.

‘ஒப்பாரும் மிக்காருமில்லை’, என்ற தனது நிலைப்பாட்டுக்கு 21ம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய சவாலாகவே சீனாவின் அசுர வளர்ச்சியை அமெரிக்கா நோக்குகின்றது.

எனவே, இப்புதிய பனிப்போரில் சீனா ஒரு பலம் மிக்க இராணுவ வல்லரசாக மாத்திரமல்ல, பொருளாதார வல்லரசாகவும் சவால் விட ஆரம்பித்துள்ளமையே ஆசிய, தென்னாசியப் பிராந்தியங்களில் அமெரிக்கா தற்சமயம் தனது கவனத்தைத் திருப்ப ஆரம்பித்துள்ளது.

இதன் வெளிப்பாடாகவே டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இம்மாத இறுதிப் பகுதியில் இந்தியாவுக்கும், பின்னர் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான புதிய பனிப்போர் இன்று இராணுவ ரீதியாக இருப்பதைவிட பொருளா தார ரீதியில் சென்று கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது.

முன்னாள் சீன அதிபர் டெங்ஸியாவோ பெங்கினால் உருவாக்கப்பட்ட நவீன சீனா, மாவோ சேதுங்கின் சீனாவைவிட பெரிதும் வேறுபட்டதாகவே காணப்படுகிறது.

சீனாவின் திறந்த பொருளாதாரக் கொள்கை Made in china என்ற பெயரை அனைத்து பிரபல்யமான சர்வதேச தயாரிப்புகளிலும் பதிக்குமளவிற்கு மாற்றமடைந்திருந்தது. இம்மாற்றம் சீனாவை ஒரு பொருளாதார வல்லரசாக ஒரு குறுகிய காலத்தில் மாற்றமடைய வைத்திருந்தது.

இந்நிலையில் இராணுவ பலத்துடன் கூடிய பொருளாதார வல்லமையை கொண்ட சீனாவின் வல்லரசுப் பலமே தற்போது ஆசியப் பிராந்தியத்திலும் தென்கிழக்காசிய பிராந்தியத்திலும் தூர கிழக்கிலும் அமெரிக்காவை மிரள வைத்துள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, அந்நாட்டின் ஜனநாயகக் கட்சியினர் எப்போதுமே ஒரு மிதவாதப் போக்கையே கொண்டிருந்தனர்.

அத்தோடு சர்வதேச ரீதியாகவும் அமைதியான சூழலைக் கொண்டிருப்பதே ஜனநாயகக் கட்சியினரின் பிரதான நோக்கமாகவும் காணப்பட்டது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளின்டன், பராக் ஒபாமா ஆகியோரது ஆட்சிக் காலங்கள் இதற்கு மிக நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருந்தன.

முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் ஆட்சியின் போது இஸ்ரேலுக்கும், பலஸ்தீன அமைப்புக்குமிடையே ஏற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமாதான ஒப்பந்தம் கிளின்டன் நிர்வாகத்தின் சர்வதேச அரசியலுக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.

இதுதவிர, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பராக் ஒபாமா அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை ஒழித்துக் கட்டுவதில் கையாண்ட நடைமுறை, மற்றும் அல்கொய்தா அமைப்பை முடக்கியமை போன்ற விடயங்கள் பாராட்டுக்குரியவை யாகவே அமைந்திருந்தன.

இந்நிலையில் தற்போது ஆசியப் பிராந்தியத்தில் கையோங்கும் சீனாவின் ஆதிக்கம் அதன் வெளிப்பாடாக இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள லடாக் பிரதேசத்தில் தற்சமயம் இந்தியா-சீனா இடையே தோன்றியுள்ள முறுகல் நிலை என்பவை ஒரு புதிய பரிமாணத்தில் வல்லரசுப் போட்டிகளை எடுத்துச் செல்வதையே அவதானிக்க முடிகிறது.

எனவே, மிகக்குறுகிய காலத்தில் ஐனாதிபதித் தேர்தலை அமெரிக்கா எதிர்நோக்கவுள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியொ இம்மாத இறுதியில் இலங்கை வருகிறார்.

அவரது வருகை ஏற்கனவே ‘வேதாளப் பிடியில்’ அதாவது சீனாவின் செல்வாக்கில் இருக்கும் இலங்கை மீது, அமெரிக்காவின் கழுகுப் பார்வையை மிக ஆழமாகச் செலுத்துவதாகவே இருக்கின்றது.

Most Popular

To Top