இலங்கை செய்திகள்

இலங்கையில் இதுவரையில் எங்கெங்கெல்லாம் கொரோனா தொற்றாளர்கள்…! முழுமையான விபரங்கள் இதோ…!

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏனைய 14 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரையில் ஆயிரத்து 346 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 10 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு கையாள்கைப் பிரிவின் பணியாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதாக, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த பணிக்குழாம் உறுப்பினர் கம்பஹாவை சேர்ந்தவர்.

குறித்த நபருக்கு, வெளியாட்களால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதியான விமான நிலையத்தின் குறித்த பணியாளருடன் தொடர்புடைய 50 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் நிறுவனத்தினுள் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பணியாளர்களை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கந்தானையில் உள்ள தனியார் மின்சார நிறுவனத்தின் 12 பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது என ஜாஎல பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவரின் மகள் மினுவாங்கொடை – பிரெண்டிக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய அவரின் தந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியான நிலையில் அவருடன் பணியாற்றிய 13 பேரும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 12 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக ஜாஎல பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாளிகாவத்தையில் அமைந்துள்ள தொடரூந்து திணைக்களத்தின் பிரதான மையத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவரின் மனைவிக்கும் கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

கம்பஹா – உடுகம்பல பகுதியை சேர்ந்த அவர், மினுவாங்கொடை – பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரின் கணவர் மற்றும் அவருடன் சேவையாற்றும் மேலும் 6 பேர் சுய தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பிரதேசங்களில் உள்ள மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வர்த்தக நிலையங்கள் நாளை முதல் 3 தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் தற்போது 18 காவல்துறை அதிகார பிரதேசங்களில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 6 ஆயிரத்து 482 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவகத்தின் பிரதி பணிப்பாளர், மருத்துவர் ஜயரூவான் பண்டார தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மருத்துவர் ஜயரூவான் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளராகவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடன் நிவாரண சபை மற்றும் அந்த காரியாலயத்தின் அனைத்து பொது மக்கள் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்று முதல் மறு அறிவிப்பு வரை அந்த சபையின் சேவை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, வடமராட்சி, கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் அரசாங்கத்தின் உத்தரவை மீறி இயங்கிய இரண்டு தனியார் கல்வி நிலையங்கள் முத்திரையிடப்பட்டுள்ளன.

நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் மறு அறிவித்தல் வரை அந்த தனியார் கல்வி நிலையங்கள் முத்திரையிடப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையிலான மாவட்ட கொவிட் 19 உயர்மட்டக் குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

எனினும் கரணவாய் மற்றும் வதிரி ஆகிய இடங்களில் உள்ள இரண்டு கல்வி நிலையங்கள் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தமை தொடர்பில் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கல்வி நிலையங்களுக்கு நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் இன்று முத்திரையிடப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் தற்போது கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதற்கான மையமாக அமைந்துள்ள மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைக்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்ததொழிற்சாலை, கொவிட்19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உரியவகையில் முன்னெடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அந்தமுறைப்படுகள் குறித்து விசாரணை செய்வதற்காக தொழிற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் இந்த விசேட குழு இன்று நியமிக்கப்பட்டது.

Most Popular

To Top