இலங்கை செய்திகள்

இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறையை பூர்த்தி செய்துள்ளனர்- பிரண்டிக்ஸ் நிறுவனம்

இந்தியாவிலிருந்து வந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் 341 பேரும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முறையாக பூர்த்தி செய்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் வழங்கிய உறுதிப்பத்திரத்தை முன்வைப்பதற்கு தயாராகவுள்ளதாக மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்திருக்கும் ஆடை தொழிற்சாலை நிர்வாகம் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது ,

341 ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஜூன் 25 , ஆகஸ்ட் 8 மற்றும் செப்டெம்பர் 22 ஆகிய திகதிகளில் மூன்று தனித்தனி விமானங்களில் (chartered flights ) இந்தியா – விசாகப்பட்டினத்திலுள்ள எமது கிளையிலிருந்து நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு வந்த அனைவரும் தனிமைப்படுத்தலை முறையாக பூரணப்படுத்தினார்கள் என்பதை உறுதிப் படுத்துகின்றோம்.

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் அதனை உறுதிப்படுத்தும் வகையில் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் என்போர் கையெழுத்திட்ட சான்றிதழ் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முதல் இரண்டு விமானங்களில் வந்தவர்கள் தத்தமது பிரதேச பொது சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலையும் முன்னெடுத்துள்ளனர். இதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 22ம் திகதி வந்தவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். அவர்களின் சுய தனிமைப்படுத்தல் நிறைவடைந்தவுடன் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

எனவே இவ்விடயம் தொடர்பில் விசாரிக்கும் எந்தவொரு அரசாங்க அதிகாரியின் சோதனைக்கும் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் கடந்த இரு மாதங்களில் இந்தியாவிலிருந்து பயணிகள் எவரும் மினுவாங்கொடை தொழிற்சாலைக்குள் வரவில்லை. அத்தோடு தொற்றுக்குள்ளான ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் குணமடைவதற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளோம்.

அதற்கமைய ரம்புக்கனையிலுள்ள பிரண்டிக்ஸ் தொழிற்சாலையொன்று 300 படுக்கைகளைக் கொண்ட தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

Most Popular

To Top