இலங்கை செய்திகள்

யாழில் கஞ்சா கடத்தல் – இராணுவ சிப்பாயுடன் பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது..!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த இராணுவ சிப்பாய் மற்றும் பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தொிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் மின்னேரியா, ஹிங்குராஹ்கொட மற்றும் அரலங்வில பகுதிகளுக்கு கேரள கஞ்சா போதைப்பொருளை கடத்தியுள்ளனர்.

மின்னேரியா குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி கே. எம். ஜீ. எஸ். குலதுங்கவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மின்னேரியா பகுதியில் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 590 கிராம் கேரள கஞ்சா, கஞ்சா விற்பனையின் மூலம் பெற்ற பணம் 61,000 ரூபா ஆகியன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களின் வங்கிக்கணக்குகளில் 402,000 ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மிஹிந்தலை இராணுவ முகாமில் கடமையாற்றும் குருணாகல் – மாவத்தகம பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரும், ஹிங்குரான்கொட – படுகொட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் மின்னேரியா – ஹேன்யாய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் நீண்ட காலமாக இரகசிய கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Most Popular

To Top