செய்திகள்

இழக்குமா இந்தியா?

வெளி நாடுகளில் எண்ணெய் சேமிப்புக் களஞ்சியங்களை அமைப்பதில் இந்திய அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்ற
நிலையில், சீனக் குடாவில் இந்தியாவின் வசமுள்ள எண்ணெய் தாங்கிகளில் ஒரு பகுதியை மீளப் பெறும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் சிலவற்றை மீளப் பெறுவது குறித்து, இந்தியாவுடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்று சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கூறி யிருந்தார் அமைச்சர் உதய கம்மன்பில.

இதுபோன்ற பேச்சுக்கள் நடத்தப்படுவதும் அதுபற்றிய அமைச்சர்கள் கருத்து வெளியிடுவதும் இதுதான் முதல் தடவையல்ல.

ஏற்கனவே அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்த அமைச்சு இருந்த போது அதுபற்றிக் கூறியிருந்தார்.

இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. அதில் முன்னேற்றங்கள் உள்ளன என்றெல்லாம் அவர் ஊடகங்களுக்கு கதை விட்டார்.

கடைசியில் அவர், சீனக் குடாவில் உள்ள எண்ணெய் தாங்கிகளை திருத்தி அதில் எரிபொருட்களை சேமிப்பதை விட, குறைந்த செலவில் புதிய தாங்கிகளை அம்பாந்தோட்டையில் அமைக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அறிவித்திருந்தார்.

காபந்து அரசாங்கம் பதவியில் இருந்த போதுதான் அவர் அவ்வாறு
குறிப்பிட்டிருந்தார்.

இப்போது புதிதாக அந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதய கம்மன்பில இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்துகிறோம் என்று கூறியிருக்கிறார்.

இருதரப்பு உடன்பாடுகளை ஒரு தரப்புக்கு சாதகமான முறையில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்றும் ஆனாலும் இந்தியா பயன்படுத்தாமல் உள்ள தாங்கிகளை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

மஹிந்த அமரவீர அமைச்சராக இருந்த காலத்தில் புதுடெல்லியுடனும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியிருந்தது.

இந்தியாவின் ஐஓசி நிறுவனத்தினால் குத்தகைக்குப் பெறப்பட்டுள்ள 99 எண்ணெய்த் தாங்கிகளில் 15 தாங்கிகளை மட்டும் தான் இந்திய நிறுவனம் பயன்படுத்துகிறது.

ஏனையவை பயன்பாடின்றித் தான் கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றை பெற்றுக் கொள்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது.

எண்ணெய் விலை குறைவாக உள்ள சூழலில் அவற்றை களஞ்சியப்படுத்தி வைக்க இந்த எண்ணெய் தாங்கிகளை பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் கூறுகிறது.

இலங்கையில் தற்போதுள்ள எண்ணெய் சேமிப்பு வசதிகள் குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கூட இல்லை.

கடல் வழி விநியோகங்களில் பாதிப்புகள் ஏற்பட்டால் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு தான் தலா 12 ஆயிரம் மெற்றிக் தொன் எண்ணெயைச் சேமிக்கக்கூடிய சீனக்குடா தாங்கிகள் சிலவற்றையாவது மீளப் பெறுவதற்கு அரசாங்கம் முயன்று வந்திருக்கிறது.

ஆனால் இந்தியா இந்த விடயத்தில் விட்டுக்கொடுக்கும் நிலைப்பாட்டில் இல்லை. இதுவரையில் இந்தியாவின் நிலைப்பாடு விடாப்பிடியாகவே இருந்து வந்திருக்கிறது.

இலங்கையிடம் எண்ணெய் தாங்கிகளை சிலவற்றைக் கொடுக்கப் போனால் அது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாட்டை உடைத்து விடும்.

அந்த உடைவு ஒட்டுமொத்த உடன்பாட்டையும் இழக்கின்ற நிலைக்கு இந்தியாவைத் தள்ளிவிடும் என்ற ஆபத்து இருப்பதாக இந்தியா கருதுகிறது. அமைச்சர் உதய கம்மன்பில கூட இருதரப்பு உடன்பாடுகளை ஒரு தரப்புக்கு சாதகமான முறையில் மாற்றியமைக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதன் அர்த்தம் தற்போதுள்ள உடன்பாட்டு வழிமுறைகளுக்கு அமைய எண்ணெய் தாங்கிகளை மீளப்பெற முடியாது என்பதுதான்.

ஆனாலும் இந்திய நிறுவனம் பயன்படுத்தாமல் உள்ள தாங்கிகளை மீளப்பெறுவதற்கு பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தான் முன்னர் இந்த தாங்கிகளை சீரமைக்கும் செலவுகளை விட புதிய தாங்கிகளை குறைந்த செலவில் அமைக்கலாம் என்று கூறியது.

இப்போது திடீரென இந்தியாவிடம் மீளப்பெறும் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் உதய கம்மன்பில.

இந்தியாவையும் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுகளையும் தீவிரமாக எதிர்ப்பவர் உதய கம்மன்பில.

அவர் இந்தியாவின் ஐஓசி நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை பலவீனப்படுத்துவதற்கு முனைகிறார்.

இதற்கு இந்தியா இடம் கொடுக்குமா என்பது தான் சிக்கலான கேள்வி.

ஏற்கனவே இலங்கையின் முன்னைய அரசாங்கமும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

அர்ஜூன ரணதுங்க அமைச்சராக இருந்த காலத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டாக 16 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு இணக்கமும் காணப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

அதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது திருகோணமலையை பிராந்தியத்தின் எண்ணெய் கேந்திரமாக மாற்றவுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பயணத்தின் போது அறிவித்திருந்தார். அந்தத் திட்டமும் அப்படியே தான் இருக்கிறது.

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இந்தியா கூட்டாக அபிவிருத்தி செய்ய இணங்கி வந்திருக்கிறதே தவிர சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை இலங்கைக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருக்கவில்லை.

எண்ணெய் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தை இலங்கை விரும்பவில்லை.

இப்போது உதய கம்மன்பில தொடங்கியிருக்கின்ற முயற்சிகளிலும் இந்தியா அவ்வளவு சுலபமாக இணக்கத்துக்கு வந்து விடும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

ஏனென்றால் இந்தியா இப்போது கடல் கடந்த எண்ணெய் சேமிப்பு களஞ்சியங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்காவில் தனது முதலாவது கடல் கடந்த எண்ணெய் சேமிப்பு களஞ்சியத்தை அமைப்பதற்கான உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

மேலும் பல நாடுகளில் இத்தகைய எண்ணெய் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது என்று பெற்றோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.

ஏனென்றால் இந்தியாவிடம் இப்போது 9 நாட்களுக்குத் தேவையான எண்ணெயை சேமித்து வைக்கும் வசதிகள் தான் உள்ளன.

உள்நாட்டில் சேமிப்பு வசதிகளை அதிகரிக்க முன்னைய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட திட்டத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

அதனால் வெளிநாடுகளில் ஏற்கனவே உள்ள எண்ணெய் சேமிப்பு களஞ்சியங்களை குத்தகைக்கு எடுத்து களஞ்சியப்படுத்த இந்தியா முற்படுகிறது.

2017ல் அமெரிக்காவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை அடுத்து இந்தியாவுக்கு அதிகளவு எண்ணெயை விநியோகிக்கும் ஆறாவது நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது.

இவ்வாறான சூழலில் தான் அங்கு எண்ணெய் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த இந்தியா முடிவு செய்திருக்கிறது.

அமெரிக்கா, ஜப்பான், மாத்திரமன்றி இலங்கையும் கூட இந்தியாவின் கடல் கடந்த எண்ணெய் சேமிப்பு களஞ்சியங்களின் வரிசையில் இடம்பெறும் வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவுடன் செய்து கொண்டது போன்றோ ஜப்பான் போன்ற நாடுகளுடன் செய்து கொள்ளவுள்ளது போன்றோ இலங்கையுடன் புதிய உடன்பாடுகளை இந்தியா செய்ய வேண்டியதில்லை. புதிய நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டியதில்லை. ஏற்கனவே இருக்கின்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறான ஒரு வசதியை ஏற்பத்துவதன் மூலம் விநியோக வசதிகள் பாதிக்கப்படும் போதோ விலை ஏற்றம் நிகழும் போதோ நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.

இந்தியாவின் இந்தத் திட்டம் சீனாவை மையப்படுத்தியது. சீனா தனது ஆதிக்கத்தை விரிவு படுத்தி வரும் நிலையில் தான் இந்தியா இவ்வாறான ஒரு நகர்வை முன்னெடுத்து வருகிறது.

சுபத்ரா

இந்தியப் பெருங்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகின்ற சூழலில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளின் கட்டுப்பாட்டை இழக்கவோ அங்கு களஞ்சிய வசதிகளை பறிகொடுக்கவோ இந்தியா இலகுவில் ஒப்புக்கொள்ளாது.

Most Popular

To Top