இலங்கை செய்திகள்

20 ஆவது திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்த்தின் நான்கு உத்தேச சரத்துக்கள், நடை முறையிலுள்ளஅரசியலமைப்பின் 3,4 ஆம் உறுப்புரைகளை மீறுவதாக அமைந்துள்ளதால் அவற்றை நிறைவேற்ற  அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரைக்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு அவசியமானது என  உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 39 விஷேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில்  தாக்கல் செய்யப்பட்ட 20 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகளை தொடர்ந்து,  உயர் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன்படி தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆம் திருத்த சட்ட மூலத்தில் 3,5,14,22 ஆம் சரத்துக்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டுமானால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மனைத்துள்ளது. 

ஐவர் கொண்ட நீதியர்சர்கள் குழாமில், 4 இற்கு ஒன்று எனும் பெரும்பான்மை அடிப்படையில் இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 39 விஷேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில்  தாக்கல் செய்யப்பட்ட 20 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகளை தொடர்ந்து,  குறித்த திருத்தம் தொடர்பிலான தனது வியாக்கியாணத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

தமது அலுவலகத்துக்கு குறித்த வியாக்கியாணம் கிடைக்கப் பெற்றுள்ளதை உறுதி செய்த சபாநயகர் மஹிந்த யாபா அபேவர்தன, எதிர்வரும் 12 அம் திகதி திங்களன்று தனது அலுவலகத்துக்கு சென்ற பின்னர், அதனை படிக்கவுள்ளதாக குறிப்பிட்டார். 

அத்துடன் அடுத்த பாராளுமன்ற திகதியான ஒக்டோபர் 20 ஆம் திக்தி முற்பகல் 10.00 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பித்த பின்னர் உயர் நீதிமன்றின் வியாக்கியாணத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக உத்தேச 20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்த நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி அது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அதனை சவாலுக்கு உட்படுத்தி, அரசியலமைப்பின் 121 ஆவது உறுப்புரை பிரகாரம் 39 விசேட மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த 39 மனுக்கள் மீதும் 20 இடையீட்டு மனுக்கள் அந்த உத்தேச மனுக்கள் மீது தாக்கல் செய்யப்பட்டன.

இந் நிலையில் அவை அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி முதல் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியர்சர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றில் 4 நாட்கள் பரிசீலிக்கப்பட்டன.

கடந்த 5 ஆம் திகதி அனைத்து தரப்புக்களினதும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், 6 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியுடன் அனைத்து எழுத்து மூல சமர்ப்பணங்களும் உயர் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

இந் நிலையிலேயே அது தொடர்பில் தமது நிலைப்பாட்டினை உயர் நீதிமன்றம் தற்போது சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்ரது.

எவ்வாறாயினும், சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள உத்தேச 20 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் 61 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top