இலங்கை செய்திகள்

சுகாதார பாதுகாப்பிற்கு மத்தியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகிறது

சுகாதார பாதுகாப்பிற்கு மத்தியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 2,936 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவிருக்கிறது. 

3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார்கள். 

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது பரீட்சை அனுமதி அட்டையினை ஊரடங்கு சட்டத்துக்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும்.

அதன் புகைப்பட பிரதி ஒன்றை மாணவர்கள் தம்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் பரீட்சை எழுதும் மாணவர்களுடன் அவர்களது பெற்றோருள் ஒருவரோ அல்லது பாதுகாவலர்களுள் ஒருவரே செல்லலாம்.

பரீட்சை இன்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பதாகவுள்ளது. பகுதி 1 மு.ப. 09.30 – 10.30 மணிவரையும், பகுதி 2 11.00 – 12.15மணி வரையும் இடம்பெறும்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்கள், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கு அமர தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்  சனத் பூஜித தெரிவித்தார்.

சகல பரீட்சை நிலையங்களிலும் கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் நடமாடும் சேவைக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார். 

சகல பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top