இலங்கை செய்திகள்

அதிகாரக் குவிப்புக்கு நீதிமன்று போட்ட தடை

ஆண்டவன் ஆட்டுக்கு அளந்துதான் வாலைக் கொடுத்திருக்கின்றான் என்பார்கள்.

அதேபோல அவன் தெரிந்துதான் குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை என்றும் கூறுவார்கள்.

இரண்டிலுமே நியாயம் உண்டு. இருக்கின்ற குட்டை வாலை
வைத்துக் கொண்டு அதனை ஆடு சுழற்றியடிக்கும் வேகத்தைப்
பார்த்தால், தப்பித் தவறி இதற்குக் கொஞ்சம் நீண்ட வாலைக்
கொடுத்திருந்தால் அக்கம் பக்கத்தில் யாரும் போய் வர முடியாத
நிலைமைதான் ஏற்பட்டிருக்கும் என்பது புரிகின்றது.

அதே போல குதிரையின் வேகத்துக்குத் தப்பித் தவறி அதற்குக் கொம்பிருக்குமானால் எதிரில் அகப்பட்டவர்கள் எல்லோரும் – அல்லது அகப்பட்டவை எல்லாம் – துவம்சம்தான்.

ஆட்டுக்கு வாலையும், குதிரைக்குக் கொம்பையும் படைப்பதில்
ஆண்டவன் கவனம் செலுத்தியமை போலதான் இருபதாவது
அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றமும் பொறுப்புடன்
செயற்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது.

அதிகார எல்லை மீறலுக்கு வாய்ப்பளிக்காமல் அது நாசூக்காகக் கடிவாளமிட்டிருக்கின்றது.

இருபதாவது திருத்தம் மூலம் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குக்
கட்டுமட்டில்லா அதிகாரம் வழங்கப்படுகின்றது, அவர் எதேச்சாதிகாரமாகவும், சர்வாதிகாரமுமாகச் செயற்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது,

அப்பதவியில் இருப்பவர் எல்லை மீறிச் செயற்பட்டால்
தடுக்க முடியாமல் போய் விடும் என்றெல்லாம் பல்வேறு காரண
காரியங்கள் – அச்சங்கள் – தெரிவிக்கப்பட்டன.

இவை எல்லாவற்றுக்கும் ஒரே துரும்பில் தீர்வு தந்திருக்கின்றது
உயர் நீதிமன்றம்.

இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவது
தொடர்பில் அது தெரிவித்துள்ள பரிந்துரைகளை நோக்கினால்,
ஏதோ ஆளும் தரப்பு – அரசுப் பிரதிநிதிகள் – சமர்பித்த அந்தத்
திருத்தத்தின் எல்லாச் சரத்துக்களையும் அப்படியே ஏற்று, அங்கீகரித்து, ஒட்டுமொத்த திருத்தங்களுக்கும் நீதிமன்றம் பச்சைக்
கொடி காட்டிவிட்டதாகவே தோன்றும்.

ஆனால் நிலைமை அப்படியல்ல. எல்லாவற்றுக்கும் சேர்த்து சரியான ஒரு தடுப்பு – பாதுகாப்பு – காவல் – ஏற்பாட்டை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் நாசூக்காக அதற்குள் பொருத்தி விட்டு விட்டது என்றே படுகின்றது.

ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் அவர் பதவி வகிக்கும் காலத்தின் போதோ அல்லது அதற்கு முன்னரோ இழைத்த அல்லது
இழைக்காமல் விட்ட ஒரு தவறுக்காக அவரின் பதவிக் காலத்தின் போது சட்ட நடவக்கை எடுக்க முடியாது என்பதே 1978ம்
ஆண்டில் இந்த அரசமைப்பு தொடங்கிய நாளிலிருந்து 2015
ஓகஸ்டில் 19வது திருத்தம் கொண்டு வரப்படும் வரையான
காலத்தின் நிலைமையாக இருந்தது.

சட்டத்தின் முன் ஜனாதிபதி மேலானவராகப் பார்க்கப்பட்டு, அவரின் நடவடிக்கைகளை சட்டம் தீண்டாதவாறு அவருக்கு விசேட சட்டவிலக்களிப்பு வழங்கப்பட்டு வந்தது. 19வது திருத்தம் அதனை மாற்றியது.

ஜனாதிபதிப் பதவியில் இருப்பவருக்கு எதிராக, அவர் இழைத்த அல்லது இழைக்காமல் போன தவறுகளுக்காக அரசமைப்பின் 126வது பிரிவின் கீழ் அவர் மீதும் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடரலாம் என்று அத்திருத்தம் தெரிவித்தது.

அந்தத் திருத்தத்தையே முழுமையாக மாற்றியமைத்து, ஜனாதி
பதிக்கு முழுமையாக சட்ட விலக்களிப்பு வழங்கும் வகையில்
அவருக்கு எதிராக யாரும் வழக்குத் தொடர முடியாது எனும் பழைய
நிலைமையை – 19வது திருத்தத்துக்கு முந்திய நிலைமையை மீள நடைமுறைக்குக் கொண்டு வர இப்போதைய இருபதாவது
திருத்தம் மூலம் முயற்சி எடுக்கப்பட்டது.

அதற்கே தனது அதிகாரம் மூலம் தடை – முட்டுக்கட்டை – போட்டிருக்கின்றது உயர்நீதிமன்றம்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இதற்கு மேலும் ஜனாதிபதிக்கு சட்ட
விலக்களிப்பு வழங்கும் விதத்தில் அரசமைப்பைத் திருத்த வேண்டும் என்றால் மேற்படி இருபதாவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில் மக்கள் முன்வைத்து அவர்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

தனக்குரிய அதிகாரங்களைக் கூட்டித் தன்னைப் பலப்படுத்திக்
கொள்வதற்காக அத்தகைய சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை
நடத்தும் விபரீத முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
இறங்க மாட்டார் எனக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை இவ்விவகாரத்துக்காக
நடத்த முயற்சிப்பது, அரச நிதியை வீண் விரயம் செய்து, நாட்டின்
வளத்தை அவமாக்கும் நடவடிக்கையாகவே முடியும்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தைக்
கட்டுப்படுத்தல், தேர்தல் ஆணைக்குழுவின் தனித்துவச் செயற்பாடுகளை ஜனாதிபதி கட்டுப்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தல் மாதிரியான ஏற்பாடுகளை அரசமைப்பில் இடம்பெறச் செய்வதன் மூலம் இந்த இலங்கைத் தீவின் அரசமைப்பு இங்கு சர்வாதிகாரத்தின் ஊற்றிடமாகப் பரிணமிப்பதை உயர் நீதிமன்றம் தடை செய்திருக்கின்றது.

அது வரவேற்கத்தக்கதே.

Most Popular

To Top