இலங்கை செய்திகள்

கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கைக்கு சீனா ஏன் வந்தது?

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் சீன விசேட குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வலுப் பெற்றிருந்ததுடன், அது கடந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் சற்று வலுவிழந்திருந்தது.

அதன்பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சீனாவுடனான உறவு மீண்டும் வலுப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தனது முதலாவது உத்தியோகப்பூர்வ பயணமாக இந்தியாவிற்கான பயணமாக கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டனர்.

இந்தியாவிற்கான பயணத்தை அடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கான பயணத்தை இந்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ள நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியிருந்த பின்னணியில், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

சீனாவில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷவின் சீனாவிற்கான பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், சர்வதேச மட்டத்திலான உறவுகளும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சீனாவுடன் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உத்தியோகப்பூர்வ கலந்துரையாடல்களை கூட முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

தனிமைப்படுத்தல் சட்டம், சுகாதார நடைமுறைகள் காரணமாக அனைத்து விதமான வெளிநாட்டு பயணங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறான பின்னணியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் கடந்த இரு வாரத்திற்கு முன்னர் காணொளி ஊடாக கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் அமைந்திருந்ததுடன், இந்தியாவினால் பல்வேறு உதவித் திட்டங்களும் இந்த கலந்துரையாடலின் ஊடாக இலங்கைக்கு கிடைக்க பெற்றன.

இவ்வாறான பின்னணியில், இலங்கையில் மூன்றாவது கோவிட் கொத்தணி அச்சுறுத்தல் நிலவிவரும் இந்த சந்தர்ப்பத்தில், சீன உயர்மட்ட தூதுக்குழுவை இலங்கைக்கு பிரவேசிக்க நேற்று முன்தினம் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் விவகார உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளிவிவகார அலுவலகத்தின் பணிப்பாளருமான யாங் ஜீச்சி தலைமையிலான 26 உறுப்பினர்களை கொண்ட குழுவே இலங்கைக்கு அவசரமாக பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்த சீன குழு, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டிற்குள் எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றது என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தன.

நாட்டிற்கு வருகைத் தரும் தூதுக்குழு உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மாத்திரம் நடத்தப்பட்டு, நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் பதிலளித்திருந்தார்.

தனிமைப்படுத்தல் சட்டம் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் சீன தூதுக்குழுவிற்கு அமுல்படுத்தப்படாமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்த பின்னணியில், அவர்கள் நாட்டிற்குள் வருகைத் தந்திருந்தனர்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுக்குழு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினரை நேற்று சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு

ஆசியாவின் 4 நாடுகளுக்கான தமது பயணத்தில், முன்னுரிமை வழங்கி, இலங்கைக்கே முதற்தடவையாக வருகைத் தந்ததாக சீன தூதுக்குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை வழங்குமாறு, சீன ஜனாதிபதி கூறியிருந்ததாகவும் ஜனாதிபதியிடம், சீன தூதுக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர பாரிய உதவிகளை சீனா வழங்கியிருந்ததாகவும், யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா பாரிய உதவிகளை வழங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், தெற்கு அதிவேக வீதி உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகளை சீனா கொள்வனவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், சீன சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட சீன தூதுக்குழு, இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்க இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தையை மீள ஆரம்பித்தல் மற்றும் உத்தேச ஹம்பந்தோட்டை தொழில்பேட்டை திட்டத்தை விரைவில் நிறைவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

கோவிட் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு தூதுக்குழு, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உள்ளிட்ட சர்வதேச விடயங்களில் இலங்கைக்கு சார்பாகவே சீனா செயற்படும் எனவும் சீன உயர்மட்ட தூதுக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

பிரதமருடனான சந்திப்பு

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று, தெற்காசியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், சீன உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் இலங்கைக்கு முதலாவதாக விஜயம் செய்வதன் ஊடாக இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த குழுவினர் கூறியுள்ளனர்.

இலங்கைக்கான முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், முதலீட்டாளர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து கருத்து வெளியிட்ட சீன உயர்மட்ட குழுவின் தலைவர் யாங் ஜீச்சி, வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ளும் போது, சீன அரசாங்கம் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கும் என கூறியுள்ளார்.

இலங்கை கோவிட் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சீனாவிற்கு ஆதரவானவர்கள் என கூறப்படும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சிக்கு வந்துள்ள நிலையிலும், சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு சுகாதார நடைமுறைகளை தளர்த்தி வருகைத்தந்தமை இலங்கை – சீனாவிற்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Most Popular

To Top