இந்தியச் செய்திகள்

பாடகர் எஸ்.பி.பி.யின் கொரோனா பாதிப்புக்கு நான் தான் காரணமா? பாடகி விளக்கம்

பாடகர் எஸ்.பி.பி.க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கு தான் காரணமில்லை என பாடகி மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்.

பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.பி.பி.க்குச் சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் ஒருங்கிணைந்து சிகிச்சையளித்து வருவதாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ராமோஜி ஃபிலிம் ஸ்டூடியோவில் ஜூலை 30, 31-ல் நடைபெற்ற தெலுங்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் படப்பிடிப்பில் பாடகர் எஸ்.பி.பி. கலந்துகொண்டுள்ளார்.

எஸ்.பி.பி.யுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற பாடகி மாளவிகா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து மாளவிகாவினால் தான் எஸ்.பி.பிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது, தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் படப்பிடிப்பில் பங்கேற்றார் என்கிற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது.

இதையடுத்து இந்தச் சர்ச்சை தொடர்பாகப் பாடகி மாளவிகா விளக்கம் அளித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பி. பங்கேற்ற நிகழ்ச்சி ஜூலை 30 அன்று படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் 2-வது நாளில் பங்கேற்ற நான்கு பாடகிகளில் நானும் ஒருவர்.

ஒருவேளை எனக்கு கொரோனா இருந்திருந்தால் மற்ற மூன்று பாடகிகளுக்கோ அல்லது என்னுடன் ஒப்பனை அறையைப் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளருக்கோ பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

கடந்த 5 மாதங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக நானோ என் குடும்பத்தினரோ வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

தொலைக்காட்சிப் படப்பிடிப்புக்காகத் தான் முதல்முறையாக வெளியே வந்தேன். படப்பிடிப்பில் பங்கேற்ற எஸ்.பி.பி.யும் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன்.

பரிசோதனை முடிவு ஆகஸ்ட் 8 அன்று கிடைத்தது. பாதுகாப்புக்காக என் குடும்ப உறுப்பினர்களும் பரிசோதனையில் பங்கேற்றார்கள்.

துரதிர்ஷ்டவசமாக என்னுடன் சேர்ந்து என் தந்தை, என் தாய், என் மகள் என அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

என் கணவருக்கு பாதிப்பு இல்லை. நாங்கள் கடினமான சூழலில் உள்ளோம். எனவே எங்களைப் பற்றி வதந்திகளைப் பரப்பாதீர்கள். வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Most Popular

To Top