ஆரோக்கிய குறிப்புகள்

பாலியல் உறவாலும் டெங்கு பரவுமா…..?

முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவுகிறது. ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். இத்தகைய டெங்கு காய்ச்சல் பாலியல் உறவாலும் பரவும் என்பதுதான் தற்போது தெரிய வந்திருக்கிறது.

ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த தனது ஆண் துணையுடன் அவர் பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது.

டெங்கு எப்படி பாலியல் உறவால் பரவும் என்பதை நம்பாத ஆய்வாளர்கள், அந்த பெண்ணின் ஆண் துணையையும் பரிசோதித்தார்கள். அவர் கியூபா மற்றும் டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பி இருந்தார்.

மருத்துவர்கள் அவரது விந்தணுவை பரிசோதனை செய்தபோது, அதில் அவருக்கு டெங்கு இருந்தது மட்டுமல்லாமல் கியூபாவில் பரவும் அதே வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகே உடலுறவு மூலமும் டெங்கு பரவும் என்பதை அறிவித்துள்ளனர்.

Most Popular

To Top